
சேலம்:
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், பயங்கர சப்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலையில் லாரிபற்றி எரிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்திலிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரிலிருந்து திருச்செங்கோடு வரை தாரமங்கலம் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 4 வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தாரமங்கலத்தை அடுத்த சின்னப்பம்பட்டி அருக சாலைப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, பணிகள் நிறைவுபெற்ற சாலையில் வெள்ளைக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலைகளில் வெள்ளை கோடு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். வெள்ளைக் கோடு அமைப்பதற்காக லாரியில் சமையல் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி பெயிண்ட்டை காய்ச்சும் பணியைச் செய்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாகக் கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்தது. தீ விபத்தில் லாரியின் ஒரு பக்கமும் எரியத் தொடங்கியது.
அச்சமடைந்த தொளிலாளர்கள் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரெனக் கேஸ் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதைப் பார்த்த தொழிலாளர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்குத் தலைதெறிக்க ஓடிச் சென்று உயிர்தப்பினர். தீ அதிகளவில் பரவ ஆரம்பித்ததுமே தொழிலாளர்கள் அனைவரும் அப்பகுதியிலிருந்து ஓடியதால் தொழிலாளர்கள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.
இந்தச் சம்பவம்குறித்து கொங்கணாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநில நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சாலையிலேயே லாரிபற்றி எரிந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
