கணவர் இறந்து 3 நாள் கூட ஆகல… துணை முதல்வராகும் அஜித் பவார் மனைவி.!

Advertisements

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார், கடந்த 29ம் தேதி மகராஸ்டிர மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்தில் பலியானார். அவரது உடல் 30ம் தேதி காலை 11 மணியளவில் பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது.

உயிரோடு இருந்தவரை, அரசியலில் அதிரடி திருப்பங்களை கொடுக்கும் அரசியல்வாதியாகவே அஜித் பவார் இருந்து வந்தார். சொந்த சித்தப்பாவான சரர் பவாருக்கு இரு முறை அதிர்ச்சி கொடுத்த வரலாறும் அஜித் பவாருக்கு உண்டு. எப்படி ராமதாஸ் மகன் அன்புமணியிடம் கட்சியையும் சின்னத்தையும் இழந்தாரோ… அதே போல சரத்பவாரும் தனது மகனிடத்தில் கட்சியையும் சின்னமான கடிகாரத்தையும்  இழந்த கதையும் நடந்தது.

அதாவது, கடந்த 2023ம் ஆண்டு  தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணியில் இரு முறை சேர்ந்தார் அஜித்பவார். அப்படிதான் , மகராஸ்டிர மாநில துணை முதல்வராகவும் ஆனார்.  ஆனால், தவறுகளை உணர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து, மீண்டும் சித்தப்பாவுடன் சேரும் மனநிலையில் இருந்த போதுதான், விமான விபத்தில் அவர் உயிரிழந்து போனார்.

இந்த நிலையில், அவரின் மனைவி சுனத்ரா பாட்டீல் மகராஸ்டிர துணை முதல்வராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவர், இறந்து 3 நாட்களுக்குள் சுனத்ரா பதவியேற்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சுனத்ராவுக்கு அரசியல் ஒன்றும் புதியது அல்ல. பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவர்தான். இவரின், தந்தை , சகோதரர் ஆகியோர் அரசியலில் இருந்தவர்கள்தான்

கடந்த 1963 ம் ஆண்டு அவுரங்கபாத்தில் பிறந்த   சுனேத்ரா, பி.காம் பட்டம் பெற்றவர். 1985 ம் ஆண்டு அஜித்பவாரை திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு, பாராமதியில் மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனத்தை நடத்தி வந்தார். வித்யா பிரதிஷ்டான் என்ற கல்விக் குழுமத்தையும் நடத்தி வருகிறார். இங்கு,  25,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு, இல்லத்தரசி, தொழிலதிபர் என்ற அடையாளத்துடன் மட்டுமே வலம் வந்த சுனத்ராவை 2023ம் ஆண்டு அஜித் பவார் அரசியலுக்கு கொண்டு வந்தார்.

2023ம் ஆண்டு தனிக்கட்சி கண்ட அஜித்பவார் 2024ம் ஆண்டு பாராமதி தொகுதி மக்களவை தொகுதியில் தேர்தலில் போட்டியிட வைத்தார். இவரை எதிர்த்து களத்தில் நின்றவர் வேறு யாருமல்ல சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேதான். இந்த தேர்தலில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் சுப்ரியாவிடம் , சுனத்ரா தோல்வி கண்டார். எனினும், மனைவியை எம்.பி.ஆக்காமல் விட மாட்டேன் என்று அஜித்பவார் கங்கணம் கட்டிக் கொண்டார். பின்னர், மனைவியை ராஜ்யசபா எம்.பி.யாக்கி அழகு பார்த்தார்.

இந்த நிலையில், அஜித்பவாரின் திடீர் மறைவு சுனத்ராவை மகராஸ்டிர அரசியலுக்குள் இழுத்து வந்துள்ளது. தற்போது, என்.சி.பி கட்சியின் தலைவராகவும் மகராஸ்டிர துணைமுதல்வராகும் பதவியேற்க வேண்டுமென அவருக்கு நெருக்கமானவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால், வேறு வழியில்லாமல் கணவர் வகித்த பதவியை ஏற்க சுனத்ரா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்று மாலை 5 மணிக்கு மகராஸ்டிர மாநில துணை முதல்வராக அவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், தெற்கு மும்பையில் அஜித் பவார் வசித்து வந்த தேவ்கிரி வீட்டுக்கு நேற்று சுனத்ரா வந்து சேர்ந்தார். மகராஸ்டிர துணை முதல்வராக சுனத்ரா பதவியேற்றால் அந்த மாநிலத்தின் முதல் பெண் துணை முதல்வர் என்ற பெயரும் அவருக்கு கிடைக்கும். மகாரஸ்டிர முதல்வர் தேவந்திர பட்னாவீஸ், ”அஜித் பவாரின் கட்சி எங்கள் கூட்டணியில் உள்ளது. அவரின் திடீர் மறைவுக்கு பிறகு, குடும்பத்தினர் எடுக்கும் எந்த முடிவுக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும்.

அஜித் தாதா அவரின் கட்சி மற்றும் குடும்பத்தினருக்கு எந்த சூழலிலும் பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும் ” என்று தெரிவித்துள்ளார். மகராஸ்டிர மாநில அமைச்சரும் அஜித்பவார் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான சகன் புஜ்பால், ”  சுனேத்ரா பவாருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இந்த கோரிக்கை நியாயமானது. அடுத்து, எங்கள் கட்சியை சரத்பவாரின் கட்சியுடன் இணைக்க வேண்டும்.

இதற்கான , பணிகளை சுனத்ராவால்தான் செய்ய முடியும் . கட்சியின் தலைவர் யார்? என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை காண அவரால்தான் முடியும்”  என்று கூறுகிறார். மும்பையில் இன்று மதியம் அஜித்பவார் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில், சுனத்ரா முறைப்படி கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். தொடர்ந்து மாலையில் நடக்கும் எளிய விழாவில் மகராஸ்டிர மாநில துணைமுதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

பொதுவாக , கணவர் இறந்தவுடன் மனைவி ஆக்டிவ் பாலிடிக்சுக்குள் நுழைவது ஒன்றும் புதிதல்ல. அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு , அவரின் மனைவி ஜானகி அரசியலுக்குள் வந்தார். தமிழகத்தின் முதல் பெண் முதல்வருமானார். நடிகர் விஜய்காந்த் மறைவுக்கு பிறகு, அவரின் மனைவி பிரேமலதா உடனடியாக, கட்சித் தலைவரானார். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்கு நுழையும் தருணத்தை எதிர்பார்த்து அவர் காத்து கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சற்று வேறுபட்டு நிற்கிறார். கடந்த 1991- ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தியை எப்படியாவது கட்சித் தலைவராக்கிட வேண்டுமென முயன்றனர். ஆனால், கட்சிப் பதவியை அவர் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. உறுதியாக மறுத்து விட்டார். பின்னர், நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமராக இருந்தார்.

பின்னர், சீதாராம் கேசரி காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். தொடர்ந்து 1998ம் ஆண்டே காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *