
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் அவரது பிறந்தநாளையொட்டி நாளை ரீ-ரிலீஸாகும். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021ல் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூலித்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தைத் தயாரித்தார்.
இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டைம் டிராவல் திரைக்கதையில் முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான மனநிலை குறித்து அழுத்தமாகக் கேள்வி எழுப்பிய இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாள் வரும் பிப்.3-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதையொட்டி ‘மாநாடு’ படத்தை ரீ- ரிலீஸ் செய்ய இருப்பதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். படம் நாளைத் திரையரங்குகளில் வெளியாகிறது.
