கொறடா நியமனம் செல்லாது.. EPS சொல்வது பொய்’ – அதிமுகவில் வெடித்த அடுத்த பிளவு.!

Advertisements

ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் சட்டமன்ற கொறடாவை நேரடியாக நியமனம் செய்ய முடியாது, எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என்று அதிமுக எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் சசிகலா, தினகரன் போன்றவர்களை இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியிருப்பதுதான் இன்றைய அரசியல் நிகழ்வில் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விரிவான செய்தியை பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. அக்கட்சி சார்பில் 47 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதாவது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் பிரிந்து நி்ற்கும் எம்எல்ஏக்கள் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “25 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து வாக்களித்தாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக சில கருத்துகளை தெரிவித்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளரான தன்னால் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை மீறி சட்டமன்றத்தில் வாக்களித்துள்ளார்கள் என சொல்கிறார். இது முற்றிலும் தவறானது என்று சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே மாதிரி, ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் சட்டமன்ற கொறடாவை நேரடியாக நியமனம் செய்ய முடியாது. சட்டமன்ற குழு கூட்டத்தை நடத்தி தலைவர், துணைத்தலைவர், கொறடா தேர்வு செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இதுதான் மரபாக இருந்து வரும் நிலையில், நான் தான் கொறடாவை நியமனம் செய்தேன் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்றும் அவரால் கொறடாவை நியமனம் செய்ய முடியாது என்றும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அதேபோல், எடப்பாடிக்கு அனைத்து விபரங்களும் தெரியும், தன்னுடைய பலவீனத்தை மறைக்க இப்படி தவறான தகவல்களை சொல்கிறார் என குற்றம் சாட்டினார் சண்முகம்.தன்னை சட்டமன்ற தலைவராக எம்.எல்.ஏ,க்களால் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி கூறுவது அப்பட்டமான பொய் என கடுமையாக சாடினார் சி.வி.சண்முகம். எம்.எல்.ஏ.,க்கள் 47 பேரின் கையெழுத்தைப் பெற்றதாக சொல்லும் எடப்பாடி, அப்படிப்பட்ட கூட்டம் எங்கு, எப்போது நடைபெற்றது என்பதை சொல்ல முடியுமா? என்றும் சண்முகம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும், அப்படி ஒரு கூட்டம் நடக்கவில்லை என்று அடித்துச் சொன்ன அவர், நாங்கள் எடப்பாடியை சந்தித்த ஒரு கூட்டத்தின் புகைப்படத்தை காட்டுகிறார். கூட்டம் நடந்ததற்கான மினிட்ஸ் நோட்டை காட்ட முடியுமா? பாண்டிச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா?.என்று கேட்ட சி.வி.சண்முகம், நான் மேலே பேசிவிட்டேன். அதாவது அமித்ஷாவிடம் எடப்பாடி பேசிவிட்டதாகவும், அதற்கு அவர்கள் சம்மதம் சொல்லி விட்டார்கள் என்றார்.

தமிழ்நாட்டில் அதிமுக தான் ஆட்சி அமைக்கப்போகிறது… நான் முதலமைச்சராகிறேன். திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என கூறியதாக சி.வி.சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை சி.வி.சண்முகம் தவிர்த்தார். இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகளை தமிழக மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

இதுக்கிடையில், அதிமுகவிலிருந்து விலகிப் போன சசிகலா, டிடிவி தினகரன், வைத்திலிங்கம் உள்பட பல முக்கிய நபர்களை கட்சிக்குள் மீண்டும் சேர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவரை சசிகலாவை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இவர்கள் முதல்முறையாக தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணியை டெல்லியிலிருந்து மத்திய அரசு தான் ஆட்டிப் படைப்பதாக தொடர்ந்து சொல்லப்படும் குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் இச்சம்பவம் இருப்பதாக அரசியல் புரிந்தவர்கள் சொல்கிறார்கள். இனிவரும் நாட்களில் எல்லாமே வெட்ட வெளிச்சமாகி விடும்.. விறுவிறுப்பான அரசியல் நகர்வுகள் தமிழகத்தை மேலும் பரபரப்பாக்கியிருப்பதை உணர முடிகிறது.

இதுக்கிடையில், அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய அதிகப்படியான வாய்ப்புள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது. பொதுவாக ஒரு கட்சியில் எம்எல்ஏக்களில் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் மொத்தமாக கட்சி மாறினால் கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி பார்த்தால் அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் அணியில் 32 எம்எல்ஏக்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 25 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். 7 எம்எல்ஏக்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

இதனால் 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தவெகவை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எஸ்பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீதிமன்றம் செல்லாம். அப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 25 எம்எல்ஏக்களின் எதிர்காலம் அமையும்.

இதனால் அதிமுக என்பது எடப்பாடி பழனிச்சாமி வசம் தான் இருக்கும். ஆனால் கட்சியின் பொதுக்குழு, பைலா உள்பட பிற முக்கிய விஷயங்களை ஆய்வில் கொள்ள வேண்டும். அதனடிப்படையில் எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் ஆகியோர் கட்சிக்கு உரிமை கோர கூட வாய்ப்புள்ளது. தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் கூட அதனை எதிர்த்தும் ஏதாவது ஒரு சட்டத்தை வைத்து போராட வாய்ப்புள்ளது.

இதனால் அவர்கள் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை நாடலாம். இது நடக்கும் பட்சத்தில் இறுதி முடிவு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை சார்ந்து இருக்கும். மொத்தத்தில் அதிமுக தனித்தனி அணியாக பிரிந்து தற்போதும் பிளவுப்பட்ட நிலையில் தவித்து வருகிறது. ஆனால் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமி வசம் தான் அதிமுக இருக்க வாய்ப்புள்ளது. இதில் ஏதாவது மாற்றம் நடக்கிறதா? என்பதை அறிய நாம் இன்னும் சில வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *