
ஆடுஜீவிதம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து நடிகை அமலா பால் நடிக்கும் அடுத்த படம்குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் அமலா பால். இவர் தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா படம்மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதையடுத்து கோலிவுட்டில் டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால்.
இருப்பினும் அவரது காதல் திருமணம் நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவரும் மனக்கசப்பால் விவாகரத்து செய்து பிரிந்ததை அடுத்து அமலா பால் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலா பால். அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
ஆடுஜீவிதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் அடுத்த படம்குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி அமலா பாலின் அடுத்த படத்திற்கு லெவல் கிராஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. அர்பாஸ் அயூப் இயக்கும் இப்படத்தில் சைதாலி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார் அமலா பால். இப்படத்தை ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து உள்ளார். மலையாளத்தில் அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தை திரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் வெளியிடுகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


