
தமிழ்நாட்டுக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதைக் கண்டித்தும், மேக்கேதாட்டில் அணை கட்ட வலியுறுத்தியும் கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் மாநிலந் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளன.
ஜூலை மாதத்தில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நொடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறக்கக் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. இதை நடைமுறைப்படுத்தாத அந்த மாநில அரசு, தங்கள் அணைகளில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று ஏமாற்றியது. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் கபினி அணை நிரம்பி அதிலிருந்து நொடிக்குப் பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்பட்டது.
ஆனால் கிருஷ்ணராஜசாகர் அணையில் மொத்தக் கொள்ளளவான 49 டிஎம்சியில் இப்போது 31 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதனால் அந்த அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடக் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதையும் செயல்படுத்தக் கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தங்கள் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றே அந்த மாநில முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதைக் கண்டித்து வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கொப்பலில் தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறக்க முடியாது என முழக்கமிட்டனர்.
தமிழ்நாட்டு லாரிகளை மறித்த கன்னட அமைப்பினர் ஓட்டுநருக்குப் பூக்கொடுத்தனர். பூக்கொடுப்போம், தண்ணீர் தர மாட்டோம் என்று கூறி முழக்கமிட்ட அவர்களைக் கர்நாடகக் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.காவிரி நீர் திறக்க உத்தரவிட்டதைக் கண்டித்துக் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் நிலையில், தலைநகர் பெங்களூரில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து பெங்களூருக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன.கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதையொட்டி மாண்டியா மாவட்டத்தில் மதுக்கடைகள், குடிவிடுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. முதன்மையான சந்திப்புகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மைசூர் பேருந்து நிலையத்தில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குக் காவல்படையினர் குவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் முன்னெச்சரிகையாகப் போராட்டக்காரர்களைக் கைது செய்தனர்.




