
தவெக தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறைந்தது 3 ஆயிரம் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
அதன்படி அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.




