ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்..!

Advertisements

நடிகர் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் ஐபிஎஸ் உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவனாஷ் குமார் மாற்றப்பட்டு உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு மாநிலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு முதுகெலும்பாகத் திகழ்வது அந்த மாநிலத்தின் உளவுத்துறை ஆகும். சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்னரே அவற்றைக் கணிப்பது, விஐபி பாதுகாப்பு, மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுகளைக் கண்காணிப்பது இந்தத் துறையின் முக்கியப் பணியாகும்.

கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தை நாம் மறக்க முடியாது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அப்போதைய திமுக அரசு, அஸ்ரா கார்க் தலைமையில் தான் விசாரணை குழுவை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஸ்ரா கார்க்கை உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது தமிழக அரசு. கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்ரா கார்க்கை, விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. சரி, அஸ்ரா கார்க் யார் என பார்க்கலாம்…

2004-ம் ஆண்டு பேட்ச்சைத் சேர்ந்த ஐபிஎஸ்  அதிகாரி இவர் பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.  ஒரு மென்பொருள் பொறியாளர் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையாலும், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆர்வத்தாலும் ஐபிஎஸ் அதிகாரியானார்.

தமிழகத்தில் தனது பணியைத் தொடங்கிய காலத்திலிருந்தே, இவர் நேர்மைக்கும், சமரசமற்ற கடமை உணர்வுக்கும் பெயர்பெற்றவராக விளங்கி வருவதாக சொல்லப்படுகிறது.  மதுரையில் காவல் கண்காணிப்பாளராக  பணியாற்றியபோது இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் இவருக்கு ஒரு ‘அதிரடி அதிகாரி’ என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.

மதுரையில் இவர் பணியாற்றியபோது, ஏழை மக்களை வாட்டி வதைத்த கந்துவட்டி கொடுமைகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.இதேபோல், தென் மாவட்டங்களில் நிலவிய சாதி ரீதியான பதற்றங்களைத் தணிப்பதிலும், அமைதியை நிலைநாட்டுவதிலும் இவரது பங்கு அளப்பரியது.

இவர் வடக்கு மண்டல ஐஜியாகப் பணியாற்றியபோது, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ரவுடியிசத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த முனைப்புக் காட்டியுள்ளார். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கப் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அஸ்ரா கார்க் மேற்கொண்டார்.

தமிழக உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு முன்னால் சில சவால்களும் காத்திருக்கின்றன. சைபர் குற்றங்கள் அதிகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் நெட் வொர்க்குகளைக் கண்டறிதல் மற்றும் மாநிலத்தின் அமைதியைப் பாதிக்கும் சமூக விரோத சக்திகளைக் கண்காணித்தல் போன்ற பணிகளில் இவர் தனது முத்திரையைப் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைதியான மற்றும் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவதில், அஸ்ரா கார்க் போன்ற துணிச்சலான அதிகாரிகளின் பங்கு மிகவும் அவசியம் என  கூறப்படுகிறது.இவர் வடக்கு மண்டல ஐஜியாக இருந்தபோது காட்டிய அதே வேகத்தையும், விவேகத்தையும் தற்போது உளவுத்துறையிலும் வெளிப்படுத்துவார் என்றே விசயம் அறிந்தவர்கள் நம்புகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *