இறக்குமதி வரி 18% ஆகக் குறைப்பு..!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வணிக உடன்பாடு இருநாட்டு நலனையும் கருத்திற்கொண்டு செய்துகொள்ளப்பட்டதாக மக்களவையில் பேசிய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட வணிக உடன்பாட்டிலை இந்தியாவின் நலன்கள் விட்டுக்கொடுக்கப்பட்டதாகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நண்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, இந்திய அமெரிக்க வணிக உடன்பாட்டை எட்டுவதற்கு முன் பல்வேறு கட்டப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், இரு நாட்டு நலன்களையும் கருத்திற்கொண்டதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் வேளாண்மை, கால்வளம் ஆகிய துறைகளின் நலன்களைக் காக்கும் வகையில் ஏற்பாடு செய்த பிறகே வணிக உடன்பாடு செய்துகொண்டதாகக் கூறினார்.

பிப்ரவரி இரண்டாம் நாள் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்பும் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 18 விழுக்காடாகக் குறைத்துக் கொள்வதாக டிரம்ப் அறிவித்ததாகக் கூறினார். இது பிற நாடுகளுக்கு விதித்துள்ளதைவிடக் குறைவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த உடன்பாடு வணிகர்களுக்கும், சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கும், தொழில்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று தெரிவித்தார். உலகுக்காக இந்தியாவில் தயாரிப்பாம், உலகுக்காக இந்தியாவில் வடிவமைப்பும், உலகுக்காக இந்தியாவில் கண்டுபிடிப்போம் என்ற முழக்கங்களை இந்த உடன்பாடு நடனவாக்கும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *