
அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கால் அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் ஊட்டச்சத்துக்காக வழங்க வேண்டிய முட்டைகளை அவர்களின் படுக்கையிலும், கால்களுக்கு அருகிலும் ஊழியர்கள் அலட்சியமாக வீசிச் செல்வதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல, நாமக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் கெட்டுப்போய் அழுகிய நிலையில் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களின் தொடர்ச்சியான அலட்சியப் போக்கால் அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு ஒரு மோசமான சூழலை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மையங்களுக்குத் தரமற்ற முட்டைகளை வழங்கிய ஒப்பந்தக்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய நோயாளிகளைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.




