
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் ரதன் பண்டிட் என்பவரின் அரசுப் பதவி நியமனம், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசால் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது…ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.. பதவி வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டதன் முக்கிய காரணம் என்ன என்பது குறித்து தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..!
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்து உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், முக்கிய பதவிகளில் புதிய நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் , தனது ஆதரவாளரும் ஜோதிடருமான ரதன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி ஆக நியமித்து நேற்று உத்தரவிட்டார். ரதன் பண்டிட் நீண்டகாலமாக விஜய்க்கு நெருக்கமானவராகவும், தவெக-வின் முக்கியப் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நியமனம் அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டது. தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வரும் என அவர் துல்லியமாக கணித்ததாக கூறப்பட்டதே இந்த நியமனத்திற்கு அதிக கவனம் ஈர்க்க காரணமாக அமைந்தது.
2020 ஆம் ஆண்டு முதல் விஜய்யுடன் இணைந்து செயல்பட்டு வரும் வெற்றிவேல், அவரது அரசியல் பயணத்தின் பல்வேறு கட்டங்களிலும் ஆலோசனை வழங்கி வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் அவரது செல்வாக்கு மேலும் அதிகரித்ததாகக் கருதப்பட்டது.
ஆனால், ஜோதிடராக அறியப்படும் ஒருவரை அரசின் முக்கிய நிர்வாகப் பதவியில் நியமித்தது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்… இந்த நியமனம் வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் களத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ், விசிக, மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தன.
“பெரியாரை வழிகாட்டியாகக் கொண்ட ஒரு அரசு, ஜோதிடரை அரசுப் பதவியில் அமர்த்துவது பகுத்தறிவு கொள்கைக்கு எதிரானது” என விசிக எம்.பி. ரவிக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சசிகாந்த் செந்தில், ஜோதிமணி ஆகியோர் விமர்சித்தனர்.மேலும் , திமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், “அரசுப் பணத்தில் ஜோதிடருக்கு சம்பளம் வழங்குவதா?” என்றும், “அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்ப்பதற்குப் பதிலாக மூடநம்பிக்கையை வளர்க்கிறதா அரசு?” என்றும் கேள்வி எழுப்பின.
ஆகையால் , இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதல்வர் விஜய், “மாற்றுக்கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை அரசு திறந்த மனதுடன் பரிசீலிக்கும்” எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற சில மணி நேரங்களிலேயே, ரதன் பண்டிட்டின் நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
பதவி வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் , தவெக தனது கொள்கையாக அறிவித்த பெரியாரியம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைக்கு இந்த நியமனம் எதிராக இருப்பதாகக் கருதப்பட்டதால் தான்..
மேலும் , முதல்வராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, கூட்டணிக் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தனது முதல் சர்ச்சைக்குரிய முடிவை விஜய் வாபஸ் பெற்றுள்ளார். இது “மக்களாட்சியில் விமர்சனங்களுக்கு மதிப்பளிக்கும் செயல்” என ஒரு தரப்பினராலும், “ஆரம்பத்திலேயே ஏற்பட்ட சறுக்கல்” என மற்றொரு தரப்பினராலும் பார்க்கப்படுகிறது.





