
கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏன் பங்கேற்கவில்லையென கேள்வி எழுப்பி இருக்கையிலிருந்து எழுந்து நின்று கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சிவ ருத்ரய்யா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்காகக் குறிஞ்சிப்பாடி பகுதிக்குச் சென்றுள்ளதால் இன்று கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லையென விளக்கம் அளித்தார். மேலும் நீங்கள் வழங்கும் மனுக்கள் மற்றும் கோரிக்கை அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் விளக்கம் அளித்தனர். பின்னர் விளக்கத்தை ஏற்ற விவசாயிகள் சமாதானம் அடைந்து கூட்டத்தில் அமர்ந்தனர். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

