
கடலூர்: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடலூர் மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஆலத்தூர்கேட்டு செல்லும் சாலையில் சங்கிலி பிள்ளையார் கோவில் அருகே இன்று காலை வேளாண்மை உதவி பொறியாளர் சத்யா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக அதே கிராமத்தை சேர்ந்த ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சசிகுமார் என்பவர் ஸ்கார்பியோ காரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.8லட்சத்து 50ஆயிரம் பணம் இருந்தது. அவற்றை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து பணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல கடலுார் மாநகராட்சி மேயராக தி.மு.க.,வை சேர்ந்த சுந்தரி உள்ளார். இவரது கணவர் ராஜா தி.மு.க., மாநகர செயலாளராக உள்ளார். இவர் கடலுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஓட்டிற்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதியம் 1:30 மணியளவில் 3 கார்களில் வருமானவரி துறை அதிகாரிகள் திடீரென மாநகராட்சி மேயர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் சிக்காததால், அதிகாரிகள் மதியம் 2:45 மணியளவில் புறப்பட்டு சென்றனர்.

