Crime: பட்டப் பகலில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை!

Advertisements

திருச்சி பொன்மலையில் பட்டப்பகலில் வாலிபர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலை மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டி வயது (27). இவருடைய தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு அண்ணன் ஒருவர் உள்ளார். முத்துப்பாண்டி கோயம்புத்தூரில் ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று வீட்டின் அருகே உள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் ஒரு மீன் கடையில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  நேற்று 12 மணிவரை மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட அவரை அவரது நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் முத்துப்பாண்டியை ஏற்றிச் சென்றதாக அங்கு இருந்தவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் இரண்டு பேரும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு பொன்மலையில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே புற்று நாகம்மாள் கோவில் பின்புறம் முத்துபாண்டி கழுத்தில் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதாகப் பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அங்குக் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

மேலும் அந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவம் நடந்த இடத்திலிருந்து பொன்மலை மாஜி ராணுவ காலனிவரை ஓடி நின்றது. பின்னர் இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து  கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்த அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *