தமிழகத்தில் பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரியில் 7 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருச்சியில் 5 கோடியே 65 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவிலும் 226 மகளிர் தங்கும் வகையில் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த 2 புதிய மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். உடனடியாக பயன்பாட்டிற்கு வரும் இத்தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.