போதைப்பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் சபதம் ஏற்க பிரதமர் மோடி அழைப்பு!

Advertisements

வளமான பாரதம் என்னும் இலக்கை எட்டுவதற்காக இளைஞர்கள் போதைப்பொருட்களிடம் இருந்து எப்போதும் விலகி இருப்பதாகச் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு விடுதலையடைந்ததன் நூற்றாண்டைக் கொண்டாடும் 2047ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை எட்ட வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வளர்ச்சியில் நாட்டின் இளைஞர்களுக்கு முதன்மையான பங்கு உள்ளது. அத்தகைய இளைஞர்கள் கல்வி, உடல்நலம், தொலைநோக்குச் சிந்தனை, நாட்டுப் பற்று ஆகியவற்றுடன் திகழ வேண்டும் என்றும், போதைப்பொருள் பழக்கம், பயங்கரவாதம், பிரிவினைவாதச் சக்திகள் ஆகியவற்றை அணுகாமல் இருக்க வேண்டும் என்றும் அரசு விரும்புகிறது.

அதன் ஒரு பகுதியாகவளர்ச்சியடைந்த பாரதத்துக்காக அழிவுச் சக்திகள் இல்லாத இளைஞர்கள் என்று சபதம் ஏற்றுக்கொள்ளும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் காணொலியில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவைக்கொண்டாடியபோது வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் நோக்கம் உருவானதாகக் கூறினார். அந்தக் கனவை நனவாக்குவதில் 140 கோடி மக்களும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஒரு நாடு வளமாக இருக்க வேண்டுமானால் அந்த நாட்டின் குடிமக்கள் நலமாக இருக்க வேண்டும், நலமான குடிமக்களே நலமான சமூகத்தைக் கட்டமைக்க முடியும், நலமான சமூகமே வளமான நாட்டைக் கட்டமைக்க முடியும் என்று தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு போதைப்பொருட்கள் அற்ற இந்தியா என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் காணொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அழிவுச் சக்திகள் இல்லாத இளைஞர்கள் என்று சபதம் ஏற்கும் இந்தத் திட்டம் ஒவ்வொரு தனிமனிதருக்கும், குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆனது, இவையனைத்துக்கும் மேலாக நாட்டுக்கானது என்று தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்னும் இலக்கை எட்டுவதற்கு இளைஞர்கள் உடல்நலங்கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  அதனால் இளைஞர்கள் போதைப்பொருட்களிடம் இருந்து எப்போதுமே விலகியிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *