
கன்னியாகுமரியில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் கண்முன்பே ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள மீராசா ஆண்டவர் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ரமலான் நோன்பு நடைபெற்று வரும் நிலையில் பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் இரு தரப்பினிடையே கடந்த சில நாட்களாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதை அடுத்து இரு தரப்பினரையும் அழைத்துக் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இதனால் அங்குக் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் இரு தரப்பினிடையே வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லாலும் கையாளும் கொடூரமாகப் போலீசார் கண் முன்பே தாக்கிக் கொண்டனர். ஆண்கள் ஒருபுறம் தாக்கிக் கொள்ள அதற்கு இணையாகப் பெண்களும் ஒருவரை ஒருவர் கொடூரமாகத் தாக்கிக் கொண்டனர்.
மேலும் கன்னியாகுமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலுக்கும் ஒரு தரப்பினர் முற்பட்டனர். இதை அடுத்து அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

