Kanyakumari Bhagavathy Amman Temple: பகவதி அம்மனுக்கு `பானக்காரம்’ படைத்துச் சிறப்புப் பூஜை!

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானக்காரம் நிவேத்தியமாகப் படைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.பானக்காரம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கன்னியாகுமரி: பங்குனி, சித்திரை மாதங்கள் கோடை காலம் ஆகும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருக்கும். அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தவுடன் வெயிலின் உக்கிரம் அதிகரித்து அனல் காற்று வீசும். இந்தக் கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் இளநீர், நுங்கு, பானக்காரம், மோர், கரும்பு ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றை குடித்து சூட்டை தணித்துக் கொள்வார்கள்.

இதேபோல இறைவனுக்கும் கோடை காலத்தில் வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியுடன் இருப்பதற்காக `பானக்காரம்’ என்ற குளிர்பானம் மாலை நேரத்தில் நிவேத்தியமாகப் படைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியாக இருப்பதற்காகப் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதங்களும் தினமும் மாலை 4 மணிக்குக் கோவில் நடை திறந்தவுடன் `பானக்காரம்’ நிவேத்தியமாகப் படைத்துச் சிறப்புப் பூஜைகள் நடக்கிறது.

எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தயாரிக்கப்படுவது தான் `பானக்காரம்’ ஆகும். இந்தப் பானகாரத்தை கோடை காலத்தில் அருந்தினால் வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு கோடை காலத்தில் பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடக்கிறது.

இந்த ஆண்டு பங்குனி மாத பிறப்பான இன்று முதல் 60 நாட்கள் தினமும் மாலை 4 மணிக்குப் பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடக்கிறது. மாலை 6.30 மணிக்குச் சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், அம்மனுக்கு படைக்கப்பட்ட பானக்காரம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதனை அருந்தினால் வெப்பம் சம்மந்தமான நோய்கள் வராது என்பது ஐதீகம் ஆகும். இதனால் இந்தப் பானக்காரம் பிரசாதத்தை வாங்கி குடிக்க கோவிலில் தினமும் மாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *