
கோவை காளப்பநாயக்கன்பாளையத்தில் நூறாண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா, கட்டடங்கள் திறப்பு விழா, கட்டடங்களைப் புதுப்பித்து வழங்கிய தன்னார்வலர்களுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு, 75 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட புதிய பள்ளிக் கட்டடங்களையும் உணவுக்கூடத்தையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து பள்ளியின் நூற்றாண்டுக் கல்வி மலரை வெளியிட்டு நன்கொடையாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு கட்டடங்களைச் சீரமைத்து வழங்கிய தன்னார்வலர்களைப் பாராட்டினர்.



