
சென்னை:
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு தளமாக மெரினா கடற்கரை உள்ளது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதிக் காணப்படும்.
நம்ம சென்னை செல்பி பாயிண்ட், கலங்கரை விளக்கம் வளைவு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவு அருகில் மட்டுமே கடற்கரைக்குள் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையே, மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களில் வருபவர்கள் ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதை ஒழுங்குபடுத்த மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, தனியார் நிறுவனம்மூலம் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இதைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதனால், கட்டணம் வசூலிக்கும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டது.
இந்நிலையில், மெரினா சர்வீஸ் சாலையில் ஸ்மார்ட் பார்க்கிங் முறையை நடைமுறைப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.
தனியார் நிறுவனம்மூலம் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், கட்டண அடிப்படையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களைக் கொண்டுவர முடியும் என்று தெரியவந்தது.
எனவே, வணிக வளாகங்களில் இருப்பது போல நேர அடிப்படையில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெரினா சர்வீஸ் சாலையில் வாகனம் எத்தனை மணி நேரம் பார்க்கிங்கில் இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போலக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
ஜூலை மாத இறுதிக்குள் இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:-
மெரினா சர்வீஸ் சாலையில் ஸ்மார்ட் பார்க்கிங் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் உள்ளே வரும்போது டிக்கெட் வழங்கப்படும்.
அந்த டிக்கெட் அட்டையைப் பெற்றுக்கொண்டு காலி இடத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். அதுபோல மெரினா சர்வீஸ் சாலைக்கு உள்ளே வரும்போது வாகன ஓட்டிகள் டிக்கெட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், வெளியே செல்லும் பாதையில் கட்டணத்தைச் செலுத்திவிட்ட பின்னரே வெளியே செல்ல முடியும்.
சர்வீஸ் சாலையின் உள்ளே நுழையும்போது வழங்கப்படும் சென்சார் கார்டை வெளியேறும் பாதையில் காண்பிக்கும்போது எவ்வளவு நேரம் நாம் வாகனத்தை நிறுத்தி இருக்கிறமோ அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இதன்மூலம், வாகனங்கள் நிறுத்துவது ஒழுங்குபடுத்தப்படும். மெரினா நீச்சல் குளம் முதல் கலங்கரை விளக்கம்வரையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஸ்மார்ட் மீட்டர் 5 நுழைவு பாதைகளில் அமைக்கப்படும். மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கென்று தனித்தனி இடம் ஒதுக்கப்பட உள்ளது.
அடுத்த 4 மாதங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
மெரினாவில் இதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொருத்து பெசன்ட் நகர், நீலாங்கரை போன்ற கடற்கரைகளில் அமல்படுத்த முடிவு செய்யப்படும். போலீசார் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
