தவெகவுக்கும், விசிகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க.வேட்பாளர் மரகதம்-குமரவேலுவை ஆதரித்து, த.வெ.க.கூட்டணி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ்அர்ஜுனா, நிர்மல்குமார் ராஜ்மோகன், விசிக தலைவர் திருமாளவன், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாளவன் உரையாற்றினார். அப்போது, திமுகவுடன் இணைந்து நெடுங்காலம் பயணித்திருப்பதாகக் கூறினார். தவெகவோடு கூட்டணியில் இணைந்திருப்பதற்கு நியாயமான காரணங்களை மறுபடியும் எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
விசிக கொள்கைகளை தவெக முன்னிறுத்தவதாகவும், அதனால்தான் கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டியுள்ளதாகக் கூறினார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதற்கு காரணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறினார். ஓட்டுக்கு காசு தராமல், சாதி, மத வரம்புகளை கடந்து எல்லா அரசியலும் கடந்து 108 இடங்களை ஒரு கட்சிக்கு மக்கள் தந்திருக்கிறார்கள் என்றபோது, அது நமக்கு கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். தவெக மட்டும்தான் பெண் தலைவர்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டுள்ளது என்றும் தவெகவுக்கும், விசிகவுக்கும் இடையே கொள்கை முரண்பாடுகள் கிடையாது என்றும் கூறினார்.



