அரசு வழக்கறிஞர் நியமன ஊழலில், பல கோடி ரூபாய் பார்ட்டி-பன்ட் வாங்கிய த.வெ.க.வை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா என தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், த.வெ.க. அரசை தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட த.வெ.க. அரசின் முகத்திரயை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம். ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் கட்சி நிதி திரட்ட தொடங்கிவிட்டது த.வெ.க. அரசு என பல புகார்கள் எழுந்தன.
அதன்படி, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் 5 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூலித்ததாக த.வெ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஞானசுந்தரி என்பவரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஊழல் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என திமுக துணை அமைப்புச் செயலாளர் ப. தாயகம் கவி, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
ஆனால் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள் செய்தது என்ன என்று கேள்வி எழுப்பிய அவர். புகார் அளித்த த.வெ.க. வழக்கறிஞரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு வழக்கை மூடி மறைக்க பார்த்தனர் என்றும், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு,
ரூபாய் 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய த.வெ.க. நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது என்றும், அது தொடர்பாக ஜெகன்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை த.வெ.க. அரசை நன்றாக வெளுத்துள்ளது என்றும், தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



