Chennai : விடியவிடியப் பெய்த மழையால் தண்ணீர் தேக்கம்!

Advertisements

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் இரவும் மழை நீடித்தது. இன்று அதிகாலையிலும் விடாமல் மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால்கள் நிரம்பியதால் பல பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

நேற்றுக் காலை எட்டரை மணி முதல் இன்று காலை 7 மணி வரை சென்னையில் அதிக அளவாகப் பாரிமுனையிலும் மடிப்பாக்கத்திலும் 16 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கொரட்டூரில் 14 செண்டிமீட்டரும், நெற்குன்றத்தில் 13 செண்டிமீட்டரும், துரைப்பாக்கத்தில் 12 செண்டிமீட்டரும், மேடவாக்கத்தில் 11 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இதேபோல் சென்னையையொட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் இரவில் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப் பேட்டை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாகச் சென்னையில் துப்புரவுத் தொழிலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர் வரலாட்சுமி காலையில் பணிக்குச் சென்றபோது தேங்கியிருந்த மழைநீரில் பரவிய மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *