பவர் சென்டர்-னு சொல்றீங்க.. ஆனா பவரே இல்ல..சட்டசபையில் காரசாரமான விவாதம்.!

Advertisements

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில், நேற்று மாநிலத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் மின்சாரத் துறை அமைச்சருக்கும் இடையே கடுமையான காரசார விவாதம் அரங்கேறியுள்ளது. சட்டம் ஒழுங்கு, போதை கலாச்சாரம் ஆகியவற்றுடன் மின் தட்டுப்பாடு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள், அவையில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளன.

மேலும் , ஃபியூஸ் திருட்டு’ புகார்கள், ‘டைமர்’ கலாய்ப்புகள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் 1.5 லட்சம் கோடி கடன் கணக்கு என ஒட்டுமொத்த மின்துறையின் செயல்பாடுகளும் இந்த விவாதத்தின் மூலம் சட்டசபையில் வெட்டவெளிச்சமாகியுள்ளன. இது பற்றிய செய்திகளை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்…!

தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே நேற்று சட்டமன்ற கூட்ட தொடரில் , காரசார விவாதம் நடந்தது. தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்பொழுது , தமிழகத்தில் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் இல்லாமல் ஒரு மூதாட்டி உயிரிழந்தார்.

மேலும், பவர் சென்டர் என்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் பவரே இல்லையே. சென்னையில் முதல்முறையாக ஒரு பள்ளிக்கு மின் வெட்டால் விடுமுறை அளிக்கப்பட்டது. இவ்வாறு உதயநிதி சட்டம் ஒழுங்கு, போதை கலாச்சாரம், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவையில் பேசியிருந்தார்.

இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்து பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிற போது, தமிழ்நாட்டுக்கு ஏதோ மின்வெட்டு இருப்பதாகச் சொல்லியிருந்தார். நாங்கள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் எங்கெங்கு, எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை ‘டேஷ்போர்டு’ மூலம் பப்ளிஷ் பண்ணிக்கொண்டே வருகிறோம்.

இந்தத் துறையுடைய நிதிநிலை அறிக்கையில், இத்துறைக்கு இன்று 1.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகள், 15 ஆண்டுகளில் இவர்களால் எந்தவித உள்கட்டமைப்பு மேம்பாடும் செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இத்துறையில் தற்போது 70,000 காலிப் பணியிடங்கள் உள்ளன.

பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டுகள் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, குறிப்பிட்டு எந்த இடம் என்று சொல்லுங்கள். எங்கெங்கெல்லாம் ஃபியூஸ் திருட்டுகள் நடைபெற்றதோ, அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 10 நாட்களாகத் தேவையில்லாமல் மின்வெட்டுகள் ஏற்படுத்தப்பட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் தெளிவாக இதைப் பார்த்துவிட்டுப் பேசினால் நன்றாக இருக்கும்.”

அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே… எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன மின்வெட்டு சம்பந்தமாக இப்போதைய அமைச்சர் கருத்துக்களைச் சொன்னார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்திற்கு 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் பெரும்பான்மையாக முடிக்கப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 90,000 மின் மாற்றிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாகவும், பழுடைந்தவை மாற்றியும் சீரமைக்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை கூடுகின்ற பொழுது, அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ரீதியாகச் செய்ய வேண்டியது அரசின் கடமை. எனக்குத் தெரிந்தவரை, இதுவரை மின்துறையில் அதிகாரிகளை அழைத்து முறையான ஆய்வுக்கூட்டங்கள் கூட நடத்தப்படவில்லை. கடந்த காலங்களில் இருந்த துறைகளைத் தொடர்ச்சியாகக் குறை சொல்வதை விடுத்து, இந்த அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி மின் விநியோகத்தைச் சீராக எடுத்துச் செல்வதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.” என்றார்.

அப்போது மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் “கடந்த ஆட்சியில் அறிவிப்புகள் மட்டும்தான் செய்தார்கள், எதையும் செயல்படுத்தவில்லை. இதற்கு முன்னால் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் அங்கே அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். தேவையற்ற விவாதத்தை எழுப்ப வேண்டாம், இன்னும் இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும், அப்போது நீங்கள் பேசிக் கொள்ளலாம்.”

இதைத் தொடர்ந்து உதயநிதி தொடர்கையில், “அமைச்சர், கடந்த 15 ஆண்டுகளாக என்று ஒரு வார்த்தையைச் சொல்லி இருக்கிறார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயலலிதா தமிழகத்துடைய முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழகத்தை ‘மின் மிகை மாநிலமாக’ மாற்றி, தமிழ்நாட்டிற்குத் தேவையான மின் உற்பத்தியை விட அதிகமாக உற்பத்தி செய்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்த மாநிலம் தமிழ்நாடு என்பதை இந்த அவையிலே பதிவு செய்கிறேன். வெள்ளை அறிக்கை வருகிற போது எல்லாம் வெட்டு வெளிச்சமாகிவிடும், அதுக்கப்புறம் பேசுங்க நீங்க!” என்றார்.

மேலும் இது குறித்து பேசிய , முன்னாள் அதிமுக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ,
“மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஊடகங்களை நன்றாகச் சிறப்பாகக் கையாளுபவர், கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார், இன்று இங்கேயும் அந்த முயற்சியை எடுத்திருக்கிறார்.
எத்தனை கோடி கடன் இருக்கிறது என்பது இன்று நேற்றல்ல; இது போக்குவரத்துத் துறை, மின்துறை போன்ற சேவைத் துறை .

இதெல்லாம் லாப நட்டம் பார்க்கிற விஷயம் இல்லை. கடன் இருந்தாலும் பொதுமக்களுக்கு மின்சாரம் சென்று சேருகிறதா என்பதுதான் முக்கியம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே கடனோடு, இதே ஊழியர் பற்றாக்குறையோடுதான் சிறப்பாகச் செயல்படுத்தினோம்.
அடுத்தது, ஃபியூஸ் கேரியர் திருடு போனதாகச் சொல்லி ஒரு காட்சியை வெளியிட்டார். பகல் நேரத்தில், நல்ல வெயிலில் ஃபியூஸ் கேரியர் திருடப்படுகிறது,

ஆனால் ராத்திரிதான் கரண்ட் ஆஃப் ஆகுது! எங்கேயோ சர்க்யூட் கனெக்ட் பண்ணி, அதில் Timer வைத்திருப்பார்களோ என்னவோ? இங்கப் புடுங்கினால் ராத்திரி 7 மணிக்கு மேல்தான் கரண்ட் ஆஃப் ஆகுற மாதிரி டைமர் வைத்த ஃபியூஸ் கேரியர் எல்லாம் புதுசாக வந்திருக்கிறதா என்பது எங்களுக்கே சந்தேகமாக இருக்கிறது!” இவ்வாறாக விவாதங்கள் எழுந்தன…

இந்நிலையில் , மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்தபடி, இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகவிருக்கும் மின்துறையின் ‘வெள்ளை அறிக்கை’ தான் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கப் போகிறது. ₹1.5 லட்சம் கோடி கடன் மற்றும் 70,000 காலிப் பணியிடங்களுக்கான காரணங்கள் அதில் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது ..

அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் இந்த காரசார விவாதங்கள் ஒருபுறமிருந்தாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, சீரான மின் விநியோகம் எப்போது கிடைக்கும் என்பதே பொதுமக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *