சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராகத் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 10-ஆம் தேதி 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை நீக்கியது. அதேநேரத்தில், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கொளத்தூர் தொகுதி காலியாக உள்ளதால், அந்தத் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

