அஸ்வினி வைஷ்ணவுக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!

முருக பக்தர்களின் மனத்தைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும், மத்திய அமைச்சரையும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் கோடிக்கணக்கான பக்தா்களின் மனத்தைத் தமிழக அரசு புண்படுத்தியுள்ளதாகச் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். மதுரையில் உலகத் தரத்தில் கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தின் உச்சியில் தீபம் ஏற்றப்போவதாகவும் கூறினார்.

இந்தப் பேச்சுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதோடு, 300 ஆண்டுகளாகப் பக்தியுடன் ஏற்றப்பட்டு வரும் திருக்கார்த்திகைத் தீபத்தையும் இடம் மாற்ற முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இப்போது, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில் நிலையம் மீது தீபம் ஏற்றுவோம் என்று பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். அதைப் பலரும் கைதட்டி ரசிப்பது வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார். தங்களின் அரசியலுக்காகத் தொடர்ந்து உண்மையான முருக பக்தர்களின் மனத்தைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும், மத்திய அமைச்சரையும் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *