West Bengal train accident:பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!

Advertisements

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில்மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

விபத்து நடந்தது என்ன?: மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில்மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரிலிருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் 5 பெட்டிகள்வரை சேதமடைந்துள்ளது.

இதற்கிடையில் சரக்கு ரயிலுக்குச் சரியான சிக்னலை சரியாகக் கவனிக்காமல் முன்னேறியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இது இன்னும் ரயில்வே துறையால் உறுதிப்படுத்தப்படவில்லை.

முதல்வர் வருத்தம்: இந்த விபத்துகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்துகுறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில்மீது சரக்கு ரயில் மோதியதாகத் தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்துப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவர் சம்பவ இடத்துக்கும் விரைந்துள்ளார்.

உதவி எண்கள் அறிவிப்பு: விபத்துகுறித்து தகவல் அறிய தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 033-23508794 (பிஎஸ்என்எல்), ரயில்வே எண் 033-23833326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50000 நிவாரணத் தொகையும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *