BJP – K. Annamalai: தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றே ஆக வேண்டும்!

Advertisements

தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது எனத் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை: தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

அதன்படி, 2026-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானமும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று மற்றொரு தீர்மானத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள்மீது விவாதங்கள் நடைபெற்றன.

இந்தநிலையில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தற்போதைக்கு சாத்தியக்கூறுகள் இல்லையென்றாலும், அது கண்டிப்பாக நடக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள், பார்லி., உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. இன்றைக்கு ஒரு எம்.பி., 20 லட்சம் பேரைப் பார்க்க முடியாது, சேவை செய்ய முடியாது.

ஒரு எம்எல்ஏ., வுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட தொகுதியாக ஒதுக்கப்படுகிறது. அவர்களாலும் பணி செய்ய முடியவில்லை. இதனால் அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்லி., யில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

2026ம் ஆண்டுக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றே ஆக வேண்டும்; அதைத் தவிர்க்க முடியாது. சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்களை யோசனை இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *