Arulmigu Mariamman Temple: 28ஆம் தேதி மாசித்தேரோட்டம்.. விழா ஏற்பாடுகள் தீவிரம்!

Advertisements

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை திருக்கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி மாசித்தேரோட்டம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் (Arulmigu Mariamman Temple, Palani) மிகவும் முக்கியமான உவ கோயிலாக விளங்கி வருவது அருள்மிகு மாரியம்மன் கோயிலாகும். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுபட்டு கிராம மக்களின் மிகப் பிரதான கோயிலாக அந்தக் கோயில் உள்ளது.

அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதைப்போலவே கோயில் நிர்வாகத்தின் சார்பில் மாசி திருவிழாவை விமர்சையாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் இன்று அதிகாலை நடைபெற்றது. நேற்று மாலை திருக்கம்பத்துக்கு காணியாளர் அரிவாள் எடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து ராமநாதநகர் அருகே இருந்த ஆலமரத்திலிருந்து கம்பத்துக்காகத் திரிசூல வடிவிலான கம்பம் வெட்டி எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் கம்பமானது வையாபுரிக் கண்மாய் அரமசரத்து வினாயகர் படித்துறையில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கம்பம் சாட்டுவதற்கான உத்திரவு கிடைத்ததைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கம்பம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நான்கு ரதவீதியில் வலம் வரச் செய்யப்பட்டு மாரியம்மன் கோயில் முன்பு அதிகாலை மூன்று மணிக்குச் சாட்டப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் கும்மிப்பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரிசூல வடிவிலான கம்பத்துக்கு பால், மஞ்சள் நீர் ஊற்றி வழிபடத் துவங்கினர்.

பழனியில் மட்டுமே பூசாரிக்கு இயற்கையாகவே திரிசூல வடிவிலான கம்பம் இருக்கும் இடம்குறித்து உத்திரவு வருவதும், இயற்கையாகவே திரிசூல வடிவிலான மரம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி கொடியேற்றமும், பிப்ரவரி 27 ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப்ரவரி 28 ஆம் தேதி மாசித்தேரோட்டமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைப் பழனிக்கோயில் இணை ஆணையர் பாரதி, துணை ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *