
சித்தூர் தென்கரை மகராஜேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவரும் பங்குனி மாதம் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், அதற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்தூர் தென்கரை மகராஜேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 11நாள்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா வரும் பங்குனி மாதம் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பங்குனி மாதம் 14ஆம் தேதிவரை 11 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், முக்கியத் திருவிழாவான மார்ச் 25ம் தேதி 9ஆம் நாள் திருவிழா அன்று தேரோட்டம் மற்றும் குதிரை ஓட்டம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தொடக்கமாக இன்று (பிப்.15) விழாவிற்கான கால்கோள் விழா நடைபெற்றது. அதில் தென்கரை மகாராஜேஸ்வரர் மற்றும் தளவாய்மாடசுவாமி கோவிலில் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் பூஜைகள் செய்து எடுத்து வரப்பட்ட கால்கோளை கோயிலில் முன்பக்கம் உள்ள பாகத்தில் கோயில் பூசாரிகள் சொரிமுத்து பட்டர் , கோவில் அறங்காவலர் மகாராஜன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நட்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

