
பறவைகள் தற்கொலையா…? ஒரு குறிப்பிட்ட இடத்திலா ? எங்கே?
வாருங்கள் பார்க்கலாம்…
மனிதர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன எனும் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா…? நம்பமுடியவில்லை… தானே. ஆமாங்க… ஆனால் உண்மை…
அசாமின் ஒரே மலைப்பகுதி ஜாதிங்கா, என்ற ஒரு சிறிய பழங்குடி கிராமம். ஆண்டின் சில வாரங்களில் மட்டும் பறவைகளின் மர்மமான தற்கொலைக்குப் பெயர் பெற்ற இடம். ஆம், ஆண்டுதோறும் பறவைகள் தற்கொலை செய்து கொள்ளும் இடம்பற்றித் தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ரஷ்யா போன்ற தூர தேசங்களிலிருந்து பறவைகள் கூட்டம் கூட்டமாக வருவதை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தற்கொலை செய்யும் இடத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருக்கிறோமா ?
பறவைகள் தற்கொலையா ? அதுவும் நம் நாட்டிலா ?

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் உள்ள ஜாதிங்கா கிராமத்திற்கு தான் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தற்கொலை செய்து கொள்வதுண்டு. இங்கு வரும் பறவைகள் போரைல் மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஜாதிங்கா கிராமத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக வருவதால் இந்த இடமானது ‘பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பறவைகளின் தற்கொலை நிகழ்வானது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது.
பறவைகளின் தற்கொலை பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் இந்தக் கிராமத்தில் 1-2 என்று இல்லை அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றன. இங்கு உள்ளூர் பறவைகள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்து வரும் புலம்பெயர் பறவைகளும் தற்கொலை செய்து கொள்கின்றன என்பது வேதனையான விஷயம்.
அது சரி எப்படி பறவைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றன?? பொதுவாகத் தற்கொலை தொடர்பான பேச்சுக்கள் மனிதர்களிடம் மட்டுமே காணப்படும். ஆனால் விலங்குகளில் இது மிகவும் ஆச்சரியமான நிகழ்வாகத் இருக்கிறது.
அங்குள்ள கிராமவாசிகளின் கூற்றுப்படி பறவைகள் மிக அதிக வேகத்தில் பறந்து வந்து அங்குள்ள கட்டிடங்கள் அல்லது மரங்களில் மோதுகின்றன. வேகமாக மோதுவதால் பறவைகளால் பறக்கக் கூட முடியாமல் மிகவும் காயமடைந்து இறக்கின்றன.
செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இரவுப் பொழுதைத் தேர்ந்தெடுக்கின்றன. அதுவும் இரவு 7 மணி முதல் 10 மணிவரை பறவைகள் இங்கு வந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றன. மீதி நாட்கள் எல்லாம் பறவைகள் அனைத்தும் வானில் பறந்து கொண்டே இருக்கின்றன.
ஏன் இந்தச் சோகம் ?
ஆண்டுதோறும் 40 வகையான உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் இங்குத் தற்கொலை செய்து கொள்கின்றன. இயற்கை காரணங்களால் ஜாதிங்காவானது பிற நகரங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்திற்குள் இரவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அறிவியல் ரீதியாகச் சில காரணங்களும் சொல்லப்படிகின்றன.

அதாவது அப்பகுதியில் உள்ள அதிக காந்த சக்தியே காரணம் எனப் பறவை இன ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது இங்குக் காந்த சக்தி மிக அதிகமாக இருக்கிறது என்றும், பனிமூட்டம் நிறைந்த பருவத்தில் இங்குக் காற்று மிக வேகமாக வீசும் என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாக, பறவைகள் ஒளி அதிகமுள்ள இடத்திற்கு அருகில் பறக்கின்றன. போதிய வெளிச்சமின்மையால், தெளிவாகப் பார்க்க முடியாமல், வீடுகள், மரங்கள், வாகனங்களில் மோதி இறக்கின்றன என்கிறார்கள்.
அதே சமயம் மக்கள் இந்தக் கிராமத்தில் சில தீய சக்திகள் இருப்பதாகவும் கிராம மக்கள் நம்புகிறார்கள், அது பறவைகளை இங்கு வாழ விடாது என்றும் கூறுகின்றனர். மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கூட இதே போல இடமும். நிகழ்வும் நடக்கின்றது. இங்குப் பறவைகள் கண்கானிப்பு மையம் அமைந்துள்ளது. ஹாப்லாங்கில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து அனுமதி பெற்று இங்குத் தங்கலாம். ஆனாலும் விலகாத மர்மமாகவே உள்ளது.
ஜடிங்காவில் அந்த வாரங்களில் பறவைகள் ஏன் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்து கொள்கின்றன என்ற மர்மத்தை விஞ்ஞானிகள் மற்றும் பறவையியல் வல்லுநர்கள் ஆராய்ந்து புரிந்து கொள்ள முயற்சித்து வரும் நிலையில், குவாஹாட்டியைச் சேர்ந்த கவிஞரும் விருது பெற்ற எழுத்தாளருமான தபதி பாருவா காஷ்யப் பறவைகளின் கதைகளைச் சொல்லத் தேர்ந்தெடுத்துள்ளார்.
அவருடைய கவிதைத் தொகுப்பான “இன் லவ் வித் ஜடிங்கா” வில், ஜடிங்கா பறவைகள் ஏன் இவ்வளவு மர்மமான முறையில் மரணத்தைச் சந்திக்கின்றன என்று அடிக்கடி கேட்கப்படும் கேள்வியைக் கவிஞர் கேட்பது மட்டுமல்லாமல், விவரிக்கவும் செய்கிறார்.
அவர் கூட இது ஒரு புதிர் என்கிறார்…
ஆனால், இன்றுவரை இந்த மர்மத்திற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை…..


