நாளை முதல் தனியார் பால் விலை உயர்வு!

சென்னை:

தமிழகத்தில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் இந்த மாதம் முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தி விட்டன.

இந்த நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள்வரை பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமான ஆந்திராவை சேர்ந்த திருமலா நிறுவனம் நாளை (1-ந்தேதி) பால் விலையை உயர்த்துகிறது. மற்றொரு தனியார் நிறுவனமான ஜெர்சி வருகிற 3-ந்தேதி முதல் பால் விலையை உயர்த்துகிறது.

இந்த நிறுவனங்கள் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்த முடிவு செய்துள்ளன. அதன்படி நிறைகொழுப்பு பால் 1 லிட்டர் பாக்கெட் 70 ரூபாயிலிருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 36 ரூபாயிலிருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 62 ரூபாயிலிருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி. பாக்கெட் 32 ரூபாயிலிருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் 1 லிட்டர் பாக்கெட் 61 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி. பால் பாக்கெட் 27 ரூபாயிலிருந்து 28 ரூபாயாகவும் உயருகிறது.

தனியார் நிறுவன தயிர் 1 கிலோ பாக்கெட் 67 ரூபாயிலிருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் தயிர் பாக்கெட் 33 ரூபாயிலிருந்து 37 ரூபாயாகவும் உயருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *