
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கி ஊழியர்களுக்கு ஐந்து நாள் மட்டுமே வேலை என்றிருந்த நிலையில் இடைக்காலத்தில் சனிக்கிழமைகளிலும் வேலை என்று அறிவிக்கப்பட்டது. இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை மற்ற சனிக்கிழமைகளில் வேலை என்று அது முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கடந்த வாரத்தில் நான்காம் சனிக்கிழமை, அடுத்து ஞாயிற்றுக்கிழமை, திங்கள் குடியரசு நாள் எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கி விடுமுறையாக இருந்தது.
இந்நிலையில் வாரத்துக்கு ஐந்து நாள் வேலை நாள் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கத்தினர் பேரணி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.


