
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நார்கோ-கோஆர்டினேஷன் சென்டர்’ விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இவ்விழாவில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு ‘விஷன் டாக்குமெண்ட்’ என்ற கொள்கை வரைவை அமித் ஷா வெளியிட்டார். இந்த கூட்டத்தின் போது, பல்வேறு மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 500 கிலோ போதைப்பொருட்களை அழிக்கும் செயல்முறையை ஆன்லைன் மூலம் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் அவர் பேசியபோது, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மிக விரைவாகத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் பிரத்யேக NDPS சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சிக் காலத்தில் 89 ஆயிரத்து 896 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதாகக் கூறினார்.


