
பாஜக தேசியத் தலைவரை விரைவில் நியமிப்பதற்கான நடவடிக்கையில் அக்கட்சி தீவிரமாக கட்சியின் பதவிகளில் தலைவர்களை நியமிக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது . வரும் ஜூலை 9 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிக்குள் பாஜக தேசியத் தலைமையில் மாற்றம் செய்யப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் கடந்தாண்டு ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில் , கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவருடையு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், அர்ஜுன் ராம் மேக்வால், பிரஹலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி, பி.டி.சர்மா, டாக்டர் சுதா யாதவ் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கெனவே, புதுச்சேரி, மிசோரம் மாநிலங்களுக்கு தலைவர்கள் நியமனம் நடந்து முடிந்துள்ளது.
