
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் என்ற பகுதியில் பத்ரகாளியம்மன் கோயிலில் பணியாற்றி வந்த காவலாளி அஜித் குமார் திருட்டு வழக்கில் விசாரணைக்காக சென்ற போது காவல்துறை தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே சாத்தான்குளத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் இதே போல சம்பவம் நடைபெற்றதால் அப்போதை அதிமுக ஆட்சிக்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டது.
இதேபோல சிவகங்கை அஜித்குமார் விவகாரத்தில் காவல்துறை மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக திமுக அரசுக்கு தர்ம சங்கடமான நிலைமை ஏற்பட்டது.
இந்த சூழலில் அமைச்சர் பெரிய கருப்பன் இன்று அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று அவரது தாயாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அஜித் குமாரின் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார்.
திமுக சார்பில் அஜித்குமார் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
