ஆர் எஸ் எஸ்- சின் பெருமைகளை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக கொண்டு செல்வதாக அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா புகழாரம் சூட்டியிருக்கார். 1925ம் ஆண்டு மராத்திய மாநிலம் நாக்பூரில் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் என்கிற அமைப்பின் நீளமான பெயரைத் தான் ஆர்.எஸ்.எஸ் என்று சுருக்கி சொல்றாங்க..இந்த அமைப்போட வயசு இப்ப 100 ஆண்டுகளை கடந்து போய்கிட்டிருக்கு.
20 ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் இந்தியாவில் அரசியல் மறுமலர்ச்சி நடந்துச்சு. தமிழர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் சென்னையில் 1916ம் ஆண்டு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. இதே நோக்கத்துக்காக தான் 1925ம் ஆண்டு பெரியார், சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிச்சாரு. அதேமாதிரி ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த நாட்டை மீட்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியதும் இதே ஆண்டில்தான். அதுவும் நம்ம சென்னையில் தான்.
இந்த இரண்டு இயக்கங்களில் மாறுபட்ட சித்தாந்தம் கொண்ட அமைப்புதான் ஆர்எஸ்எஸ். இந்த இயக்கமும் இதே ஆண்டில் தான் மராத்திய மாநிலம் நாக்பூரில் தொடங்கியிருக்காங்க. இந்துத்துவத்தின் அடிப்படை கொள்கைகளை கட்டிக்காப்பதே இந்த அமைப்பின் லட்சியம் என்றாலும், சுதந்திரப் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுத்துக் கொண்டதா இப்ப வரைக்கும் ஆர்எஸ்எஸ்காரர்கள் கிளைம் பன்றாங்க. இதுதொடர்பாக வாத விவாதங்களும் ஆவேசமான கருத்துப் பரிமாற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கு.
இந்தியாவில் இதுவரை 3 முறை தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கம் எதுவென்றால் அது ஆர்எஸ்எஸ் தான். இந்த அமைப்புதான் இந்துத்துவா சக்திகளுக்கு தாய் என்றால் மிகையில்லை. இன்றைய பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா என பாஜக அமைச்சர்களில் பெரும்பாலோர் இந்த இயக்கத்தில் தான் பயற்சிப் பெற்றுள்ளனர்.பாஜகவில் இருக்கிற முக்கியத் தலைவர்களான பிரதமர் மோடி, துணைக்குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்பட பலர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றியிருக்காங்க…
இந்த அமைப்பு தேர்தலில் நேரடியாக போட்டியிடாது என்பதால் இதன் அரசியல் பிரிவாக பாஜக என்ற கட்சியை 1980ம் ஆண்டு தொடங்கியிருக்காங்க.. இந்தக் கட்சி தொடங்கியவுடன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 3 இடங்களைப் பிடித்தது. ஆனாலும் பாஜக பல யுத்திகளைக் கையாண்டு 1999-ம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்து 2004 வரை தடுமாற்றம் இல்லாமல் ஆட்சி நீடித்தது. அதையடுத்து 10 ஆண்டுகள் காங்கிரஸுக்கு ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த 12 ஆண்டுகளும் பாஜகவின் ஆட்சி நடந்தாலும் அசன் DEEP STATE ஆக இருப்பது ஆர்எஸ்எஸ்தான் என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு இதுவரை பாஜக எந்த எதிர் வினையையும் ஆற்றவில்லை என்றாலும், அதேநேரம், ஆம் என்றும் அவர்கள் கூறவில்லை. ஆர்எஸ்எஸ், பாஜக இரு அமைப்பின் தலைவர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் இருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் பேசப்பட்டாலும் வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. பிரதமருக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அடுத்த பிரதமர் பதவிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற பேச்சு இருந்தது.
சில மாதங்களுக்கு முன் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமர் மோடி சென்று அதன் தலைவர்களை சந்தித்து எல்லோரையும் ஆச்சரியத்துக் குள்ளாக்கினார். பிரதமராக பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டுமுதல் நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் செல்லாத மோடி, இப்போது மட்டும் ஏன் சென்றார் என்ற விவாதங்கள் ஊடகங்களில் சூட்டைக் கிளப்பின. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இப்போதும் அவ்வப்போது ஒன்றிய அரசுக்கு ஆலோசனையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, ஆர்எஸ்எஸின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய கொசபலே, ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பிரதமர் மோடி சூப்பரா கொண்டு சேர்க்கிறார் என்று புகழ்ந்து தள்ளியிருக்கார். மேலும் சமூக நல்லிணக்கம், காலனிய ஆதிக்க மனப்பான்மையில் இருந்து விடுதலை, குடும்ப பாரம்பரியத்தை வலுப்படுத்துதல், சமூக நல்லொழுக்கம், நிலையான வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய 5 அம்சங்களை அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்காக ஆர்எஸ்எஸ் நிர்ணயித் துள்ளதாக சொன்னார்.
இந்த இலக்குகளை நோக்கி பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருவதாக சொன்ன அவர், ஆர்எஸ்எஸ் பயன்படுத்தும் அதே வார்த்தைகளைப் பிரதமர் மோடி பயன்படுத்தாமல், தந்திரமாக தனக்கே உரிய பாணியில் ஆர்எஸ்எஸ் பெருமைகளை செயல்படுத்தி வருவதாக புகழ்ந்திருக்காரு. இதற்கு ஒரு உதாரணத்தையும் தத்தாத்ரேயா சொல்றாரு. என்னன்னா… மக்களிடம் மரம் நடும்படி ஆர்எஸ்எஸ் சொல்லுது..ஆனால் பிரதமர் இதே விசயத்தை எப்படி சொல்றாருன்னா, மக்கள் எல்லாம் அவர்கள் தாயார் பெயரில் மரங்களை நட வேண்டும் என்று சொல்லி அதை ஒரு நெகிழ்ச்சியான இயக்கமாக மாற்றுகிறார் என சுட்டிக்காட்டுகிறார்.
பிரதமர் மோடி ஆண்டுதோறும் ஆற்றும் தனது சுதந்திர தின உரைகளில் குறிப்பாக 2022ல் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி கொடுத்த 5 உறுதி மொழிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிபலிப்பு தான். அதேமாதிரி, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, தன் கலாச்சார வேர்களை மறக்காமல் இருப்பது சந்தோஷத்தை தருவதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் சொல்லியிருக்காரு.
பிரதமர் மோடி எப்போதும் ஆர்எஸ்எஸின் நோக்கங்களை நன்கு உணர்ந்து இருப்பதோடு அந்த அமைப்பின் மிகச் சிறந்த பிரதிநிதியாகவும் செயல்படுகிறார் என்று பாராட்டு கொடுத்திருக்கார். கடந்த 1980ம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்புடன் அதற்கு இருக்கும் தொப்புள் கொடி உறவு மாறாமல் இருப்பதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாரேயா பேட்டி கொடுத்திருக்காரு..