கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன்..!

Advertisements

அதிமுக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார். அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்ததில் இருந்து அக்கட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும், ஜெயலலிதா காலத்தில் இருந்தே மாநில அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் செங்கோட்டையன்.

கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைத்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அதற்கான முயற்சியைப் பத்து நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

செங்கோட்டையனின் கருத்துக்கு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியச் செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியன், ஈஸ்வரமூர்த்தி, கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் குறிஞ்சிநாதன், அந்தியூர் ஒன்றியச் செயலாளர் தேவராஜ், அத்தாணி பேரூராட்சிச் செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் மருதமுத்து, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மோகன் குமார் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவுகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்டுள்ளார். ஏற்கெனவே பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், அதிமுகவின் வலுவைக் குறைக்கும் வகையில் பழனிச்சாமி எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசியல் நோக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கியது மகிழ்ச்சி அளிப்பதாகச் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *