சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் திமுக அரசு – ஓபிஎஸ்!

Advertisements

சென்னை:

 அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்கு வக்கில்லாத அரசாகத் திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது.

சமூக நீதி என்று சொல்லிக் கொண்டு சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கிக் கொண்டிருக் கிறது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல அரசு என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது, வருவாய்க்கு வழி வகுப்பது, சேர்ப்பது, பாதுகாப்பது, பாதுகாத்ததை பிரித்துச் செலவழிப்பது இவற்றில் வல்லவர் அரசர் என்பது இதன் பொருள்.

இதற்கு முற்றிலும் முரணான அரசாகத் திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் மொத்த வருமானம் 2021-2022ம் ஆண்டு 2,07,492 கோடி ரூபாய். இது 2024-2025ம் ஆண்டு 3,11,239 கோடி ரூபாயெனக் கணிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் பொருட்கள் மற்றும் சேவை வரி, மதிப்புக் கூட்டு வரி, முத்திரைத் தாள் கட்டணம், வாகன வரி, மத்திய அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் 1,03,747 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் அரசுக்குக் கிடைத்துள்ளது.

இது தவிர, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றின் மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கூடுதலாகக் கிடைத்து வருகிறது. இது அனைத்தும் மக்கள்மீது கூடுதல் நிதிச் சுமையைச் சுமத்திய தன் மூலம் கிடைத்த வருவாய்.

இதே போன்று, கடன் என்று எடுத்துக் கொண்டால், திமுக அரசு ஆட்சிப் பொறுப் பேற்றபோது 4,85,000 கோடி ரூபாயாக இருந்த கடன், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திமுக ஆட்சிக் காலத்தில் 8,33,362 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதாவது, கடந்த 43 மாத கால திமுக ஆட்சியில் மட்டும் 3,48,362 ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இவ்வளவு கடன் பெற்றும், மூலதனச் செலவு அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை.

ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வருமானம் ஈட்டியும், வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.

மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டவில்லை. நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த லட்சணத்தில், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திய மின்சாரக் கட்டணமான 7,351 கோடி ரூபாயை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தாமல் உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ள்து.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் அரசு தாமதப்படுத்திக் கொண்டே வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகையுடன் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை தருவதற்கு பணமில்லை. திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து தரப் பணமில்லை.

புதிதாகச் சட்டக் கல்லூரி திறக்க நிதியில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மருத்துவக் கல்லூரி கூடத் திறக்கப்படவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.

சட்டம் முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழைக் கூட வழங்க அருகதையற்ற அரசாகத் திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

அதை நிரப்புவதற்கு வக்கில்லாத அரசாகத் திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. சமூக நீதி என்று சொல்லிக் கொண்டு சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் அரசாகத் திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஆட்சி முடியும் தருவாயிலாவது நிதி மேலாண்மையில் திமுக அரசு கவனம் செலுத்தி நிதிச் சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் தமிழ்நாட்டை சீரழித்த திமுக சீரழியும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *