Advertisements

செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 ஆம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், போக்குவரத்துறையில் பணிகளை வழங்குவதாகக் கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் மீது வழக்குத் தொடர முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியவில்லை என்று கூறினார். அமலாக்கத்துறையின் கோரிக்கையை முந்தைய திமுக அரசு நிராகரித்து விட்டது என்று குற்றம் சாட்டினார்.
லஞ்சத்திற்கு எதிராக ஜீரோ சகிப்புத் தன்மையுடன் த.வெ.க. அரசு செயல்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Advertisements



