AIADMK: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – பா.ஜ.க. கூட்டணி முடிவு!

Advertisements

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணிகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பனிப்போர் நிலவி வருகிறது. அண்ணாவை விமர்சித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.

‘பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை’ என்று டி.ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார். பா.ஜ.க. துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சக்ரவர்த்தி உள்பட நிர்வாகிகள் எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே வார்த்தை யுத்தம் அரசியல் களத்தைப் பரபரப்பாகியது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று அறிவித்தார். இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

கருத்துக்கேட்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியைத் தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிவார் என்றும் தெரிகிறது. பா.ஜ.க. கூட்டணிகுறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

AIADMK

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *