
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் உண்மையான நோக்கத்திற்கு மாறாக மத்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மத்திய அமைச்சரின் அந்தப் பதிலை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காவிரி என்பது வெறும் நீராதாரமட்டுமல்லாமல் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குவதாகவும், கீழ்ப்பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதியின்றி மேல் மாநிலம் அணை கட்ட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் எவ்விதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதிகளையும் மத்திய அரசு வழங்கக்கூடாது என்றும், எந்தவொரு கட்டுமானப் பணியும் தொடங்குவதற்கு முன்பு முழுமையான தொழில்நுட்ப மற்றும் சட்டப்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
தமிழகத்திற்கு வர வேண்டிய நீர்வரத்து சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர் விஜய், இக்கடிதத்தில் தெரிவித்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.



