Ranveer Singh: அப்பா ஆகப்போகும் ரன்வீர் சிங்!

Ranveer Singh: பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் ரன்வீர், தீபிகா இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்தனர். குறிப்பாகத் தீபிகா படுகோனே கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு மாஸ் ஹிட் படங்களில் நடித்துவிட்டார். அதில் ஒன்று பதான் மற்றொன்று ஜவான்.

அந்த இரண்டு படங்களிலுமே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா. அந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு தீபிகா படுகோனே நடிப்பில் ஃபைட்டர் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா. இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தற்போது நடிகை தீபிகா கைவசம் கல்கி திரைப்படம் உள்ளது. இதில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் தீபிகா. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரைக்கு வர உள்ளது. இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கல்கி படத்தில் நடித்து முடித்த கையோடு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் தீபிகா. அதன்படி தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ள மகிழ்ச்சிகரமான தகவலையும் தீபிகா பகிர்ந்துள்ளார். திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்குப் பின் கர்ப்பமாகி இருக்கும் தீபிகாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *