மத்திய அரசின் பதில் அதிர்ச்சியளிக்கிறது – அண்ணாமலை கண்டனம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்குத் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வள அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ஆம் ஆண்டு அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி, ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் கூறிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா? என்ற சந்தேகத்தை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், இரு மாநிலங்களிடையான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டுச் செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *