76ஆவது அரசியலமைப்பு நாள் – நாடாளுமன்றத்தில் முகவுரை.!

Advertisements

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுக்கொண்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் அரசியலமைப்பு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 75ஆவது அரசியலமைப்பு நாள் இன்று தில்லியில் நாடாளுமன்றத்தின் நடு அரங்கில் கொண்டாடப்பட்டது.

இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான இராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்டார். நமது அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதிப்பு, கண்ணியம் ஆகியவற்றுக்கு உறுதியளிப்பதாகத் தெரிவித்தார்.

மாநிலங்களவைத் தலைவர் இராதாகிருஷ்ணன் பேசியபோது, கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் தன்னிகரற்று விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சட்டம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஏற்கெனவே உள்ளது. இந்நிலையில் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய ஒன்பது மொழிகளில் ஆக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டப் படிகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு படித்ததும், மற்ற அனைவரும் அதை வழிமொழிந்தனர்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு விடுதலைக்குப் பின் அரசியல் நிர்ணய சபை இடைக்கால நாடாளுமன்றமாகச் செயல்பட்டதைக் குறிப்பிட்டார். அரசியல் சட்ட வரைவுக்குழுத் தலைவராக இருந்த அம்பேத்கர் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பிகளில் ஒருவர் என்றும் தெரிவித்தார். முத்தலாக்கைத் தடை செய்தது முஸ்லிம் பெண்களின் சமூக நீதிக்கான மாபெரும் முன்னெடுப்பு என்றும், சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்தியது பொருளாதார ஒருமைப்பாட்டுக்கான மிகப்பெரிய சீர்திருத்தம் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கத் தடையாக இருந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *