நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின் படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எதற்காக முதலமைச்சர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக முதலமைச்சர் மாறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்கத் தான் முதலமைச்சருக்கு நேரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணிப் பேச்சுக்கு தில்லிக்குப் பறந்தவர், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக் காட்டியுள்ளார்.
இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போன நிலையில் விவசாயிகளின் துயரங்கள் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல், முதலமைச்சர் பைசன் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


