
‘ஏழைகளின் ஊட்டி’! ஏற்காடு…
‘மலைகளின் அரசன் சேர்வராயன்’ எனப் போற்றப்படும் சுற்றுலாப் பிரதேசம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஏற்காடு. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, அனைத்து நடுத்தர மக்களின் வார இறுதி பொழுதுபோக்குத் தளமாக விளங்குகிறது. அதிக செலவில்லாத சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏற்காட்டை ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைப்பர். ஏற்காடு சென்றால் காணவேண்டிய முக்கியமான பொழுதுபோக்கு இடங்கள் குறித்துப் பார்ப்போம்.
ஏற்காட்டின் பிரபல உணவுகள்:
ஏற்காட்டில் முதல்தர சாக்லேட்கள், டீ தூள், பெரிய கல் மீன் கறி கிடைக்கும். இதுதவிர ஊட்டியில் கிடைப்பதுபோல சுட்ட சோளம், கடலை, மாங்காய், கேரட் காரக் கலவை, இனிப்பு சோளம் உள்ளிட்டவையும் கிடைக்கும். இதுதவிர இங்கு கிடைக்கும் ஆலிவ் எண்ணெய், யூகலிப்டஸ் தைலம், ‘ரோல் ஆன்’ வாசனை திரவியங்களை வாங்கிச் செல்ல பல ஊர்களில் இருந்து கூட்டம் அலைமோதும்.
சேர்வராயன் கோவில்:

இது ஏற்காட்டின் பழமையான சிறிய குகைக் கோவில். இங்கு மலையை குடைந்து கோவில் கருவறை கட்டப்பட்டு இருக்கும். கோவில் உள்ளே விளக்கு வெளிச்சம் மட்டுமே பிரகாசிக்கும். ஆண்டுதோறும் மே மாத்த்தில் இங்கு நடைபெறும் திருவிழா பிரபலமானது. மிக சக்திவாய்ந்த கடவுளாக இப்பகுதி மக்களால் பார்க்கப்படும் தெய்வம் சேர்வராயன்.
பெரிய ஏரி:

பெரிய ஏரி 50 அடி அழம் கொண்டது. இதைச்சுற்றிலும், மான்பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணாபூங்கா ஆகியவை அமைந்துள்ளன. இங்கு படகு சவாரி மிகப் பிரபலம்.
அண்ணா பூங்கா:

அண்ணா பூங்கா பெரிய ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. இதில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் கோடை விழாவின்போது மலர்கண்காட்சி நடைபெறும். இதனைக் காண பல ஊர்களில் இருந்து மக்கள் வருகை தருவர்.
தாவரவியல் பூங்கா:

இந்திய தாவரவியல் கழகம் நிர்வகிக்கும் தாவரவியல் பூங்காவில் பல அரிய தாவரங்கள் பராமரிக்கப்படுகின்றன.
கிள்ளியூர் நீர்வீழ்ச்சி:

ஏற்காட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கிள்ளியூர் நீர்வீழ்ச்சி ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இதில் குளிக்க பலர் ஆர்வம் காட்டுவர்.இங்கு பிரம்மாண்ட பாறைகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கிருந்து பார்த்தால் குளிர்காற்றின் மெல்லிய அலையோசையின் பின்னணியில் சேலம் நகரமே பிரமாண்டமாகக் காட்சியளிக்கும்.
பகோடா காட்சி முனை:

ஏற்காட்டின் கிழக்கு முனையில் அமைந்துள்ள இந்த காட்சிமுனை ‘பிரமிட் பாயிண்ட்’ எனவும் அழைக்கப்படும். இங்கு ராமர் கோவில் ஒன்றுள்ளது. இங்கிருந்து அயோத்தியாபட்டணம் பகுதிகளை கண்டுகளிக்கலாம். இது ஏற்காட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கோவிலை ஒட்டு பரந்த புல்வெளி உள்ளது. சுற்றுலா பயணிகள் இங்கு மதிய உணவருந்துவது வாடிக்கை.
ஸ்ரீ சக்ர மகாமேரு கோவில்:
உலகின் மிகப்பெரிய ஸ்ரீ சக்ர மஹா மேரு கோயில், கோயிலில் முப்பரிமாண பிரமிட்டைக் கொண்டுள்ளது, இது மேலிருந்து பார்க்கும்போது ஸ்ரீ சக்கரத்தின் வடிவத்தை எடுக்கும். ஸ்ரீ சக்கரம் கொண்டு தேவியை வழிபட்டால், இறுதி சக்தியை வழிபட்டதற்கு சமம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். கோவிலின் அமைதியான மற்றும் துடிப்பான சூழல் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. பிரதான கருவறையானது வெள்ளைப் பளிங்குக் கற்களால் ஆன பாதைகளுடன் அமைக்கப்பட்டு, அரை வட்டக் குழியைக் கொண்டுள்ளது, அதில் நீர் நிரப்பப்பட்டால், கருவறையின் விமானத்தை உருவாக்கும் ஸ்ரீ சக்ர மகா மேருவின் பிரதிபலிப்பைக் காட்டுகிறது.

இந்தக் குழியில் ஒரு நாணயத்தை எறிந்து ஏதாவது வேண்டினால் அந்த ஆசை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு முதன்மையான தெய்வமாக விளங்கும் லலிதா திரிபுரசுந்தரி தேவி, படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றின் பாத்திரத்தை வகிப்பவள் என்று பொருள்படும் லலிதா என்ற பெயருக்கு ஏற்றது. ஸ்ரீ சக்ர வழிபாட்டில் மற்ற தெய்வங்கள் மற்றும் தெய்வங்களும் அடங்கும் என்பதால், சரஸ்வதி, விஸ்வரூப மூர்த்தி மற்றும் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் அழகிய மரச் சிற்பங்களும் இங்கு உள்ளன, அவை ஒவ்வொன்றும் 10 அடி உயரம் மற்றும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

கோவில் மிகவும் துடிப்பானது மற்றும் தியானத்திற்கு ஏற்ற சூழலை வழங்குகிறது. ஒரு சிறிய பாதை குரு தட்சிணாமூர்த்தியின் சன்னதிக்கு செல்லும் வழியில் நீண்ட பாதையில் புத்தர் மற்றும் பிற கடவுள்களின் சிலைகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய நீரூற்றுகள் உள்ளன. சுற்றிலும் உள்ள கண்ணாடிப் பலகைகள் மற்றும் பூச்செடிகள் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியை உருவாக்குகின்றன. இந்த கோவிலின் அழகை ஆராய்வது மதிப்புக்குரியது, மேலும் ஒரு நாணயத்தை குழியில் போட்டால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பட்டு உற்பத்தி பண்ணை:
பட்டுப் பண்ணையில் மெல்பெரி செடிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பட்டு பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் காணலாம்.
ரோஜாத் தோட்டம்:

ரோஜாத் தோட்டத்தில் கண்களைக் கவரும் பல வண்ண ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா செடிகள் விற்கப்படுகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவர்.


