Pachaimalai Hills: பசுமை போர்த்திய பச்சைமலை!

Advertisements

இதன் இரண்டு பக்கம் செல்லும் வழியெல்லாம் அருவிகள், பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும் பல இடங்கள் காணப்படுகிறது…

திருச்சியிலிருந்து துறையூர், அங்கிருந்து ஆத்தூர் சாலையில் சென்று உப்பிலியபுரம், அங்கிருந்து சோபனபுரம் வழியாகச் சென்றால் பச்சைமலையை அடையலாம். அல்லது பெரம்பலூர் சாலையில் சென்றால் செங்காட்டுப்பட்டி என்ற ஊரின் வழியாக மூலக்காடு என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து பச்சைமலைக்கு செல்லலாம். இதன் இரண்டு பக்கம் செல்லும் வழியெல்லாம் அருவிகள், பச்சைக்காடுகள், வயல்வெளிகள் எனக் கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும் பல இடங்கள் காணப்படுகிறது.

இங்கே காணும் இடமெல்லாம் பசுமை போர்த்தியது போல் பச்சைப்பசேலென்ற மரங்கள், புல்வெளிகள் செடிகள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் இயற்கையால் இந்த மலை சூழ பட்டுள்ளதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் குளிர்ந்த காற்று மற்றும் செடிகளின் மூலிகை வாசனை நம் மனதிற்கு இதம் அளிக்கிறது.

இதுமட்டுமல்லாமல் இங்குப் பறவைகள் கூட்டம், பட்டாம்பூச்சிக் கூட்டம் என்று உயிரினங்களுக்கும் பஞ்சமில்லை. போகும் வழியெல்லாம் பெரிய பெரிய மரங்கள் அதில் விளையாடும் சிறுவர்கள் என்று கட்டடங்கள் இல்லாத, எந்த வாகனங்கள் சத்தமும் இல்லாத ஒரு இடமாக அமைந்துள்ளது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஏற்ற இடம்தான் இந்தப் பச்சைமலை.

இந்த மலையில் வனத்துறை கணக்கெடுப்பின்படி, 154 பறவை இனங்கள் வாழ்கின்றன. மேலும் இந்த மலைப்பகுத்திக்கு 135 வகையான பட்டாம்பூச்சி இனங்கள் வந்து செல்கின்றன.

வாகன இரைச்சல் ஏதும் இல்லாத காரணத்தால், இங்குள்ள பறவைகளும் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஒரு குளிர்ந்த மலை பகுதியாக இந்தப் பச்சை மலை உள்ளது.

மலையின் அடிவாரத்திலிருந்து மேலே செல்ல ஆரம்பிக்கும்போது மேகங்களெல்லாம் கீழே இறங்கி. ஒரு அழகான அனுபவத்தைக் கொடுக்கும்.

மேலும் இங்குள்ள அருவிகளில் சத்தமானது ஒரு இதமான உணர்வைத் தருகிறது. ஓங்கி விழும் நீரின் சத்தத்தைக் கேட்கும் போதே, மனதிற்கு ஒரு நிம்மதி கலந்த மகிழ்ச்சி கிடைக்கும். இந்தப் பச்சைமலையில் மங்களம் அருவி, எருமைப்பள்ளி அருவி, மயிலூற்று அருவி, கோரையாறு அருவியெனப் பல அருவிகள் இருக்கின்றன.

இதில் எருமைப்பள்ளி, கோரையாறு அருவிகளுக்கு வனத்துறையினரின் அனுமதி, பாதுகாப்பு இல்லாமல் பயணம் செய்ய அனுமதியில்லை. இத்தனை அருவிகளும் ஓரே மலையில் அமைந்துள்ள காரணத்தால் பச்சைமலை ’அருவிகளின் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பேலூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் இங்கு இருக்கிறது. பச்சைமலை தென்புறனாடு, வன்னாடு, கோவைநாடு என்று மூன்று கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு அங்கு மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர்.

மேலும் சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகளும் இந்தப் பச்சைமலையில் தான் உற்பத்தியாகின்றன. மொத்தத்தில் பச்சைமலை அருவிகள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாப் பகுதி மட்டுமல்லாமல், இயற்கையின் உறைவிடமாகத் திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *