
ஓசூர் விடுதியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண் ஊழியர்களின் தனியுரிமை மீறப்பட்டதா? என வினவியுள்ள பாமக தலைவர் அன்புமணி, தொழிலாளர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள குளியல் அறைகளில் ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதில் பதிவான காட்சிகள் வெளியாட்களுக்கு விற்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி அங்குப் பணியாற்றும் பெண்கள் போராட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் தங்குவதற்காக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விடுதியை கட்டிக் கொடுத்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விடுதி மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்குத் தங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
பெண் தொழிலாளர் விடுதியின் குளியலறையில் காமிராக்களை பொருத்தியதாக ஒரு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறிந்து அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



