அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழா தீவிரம் !

Advertisements

அயோத்தி:

Advertisements

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது.

அக்கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி, குழந்தை ராமர் சிலைக்குப் பிரதமர் மோடி முன்னிலையில் குடமுழுக்கு விழா நடந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் அக்காட்சியை நேரலையில் பார்த்தனர்.

இதற்கிடையே, ஜனவரி 11-ந் தேதி ராமர் கோவில் நிறுவப்பட்ட தினம் என்பதால், குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழா, 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. 13-ந் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ராமர் கோவில் குடமுழுக்கு நடந்த பகுதியில், 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் ஜெர்மன் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கூடாரத்திலும், யாகசாலையிலும் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள், சடங்குகள், தினசரி ராமகதை பிரசங்கங்கள் ஆகியவை நடைபெறும்.

தினந்தோறும் பகல் 2 மணிக்கு ராமகதை அமர்வு தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, ராமசரிதமனாஸ் பிரசங்கம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும். தினமும் காலையில் பிரசாத வினியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாகம் நடக்கும் பகுதியில் அலங்கார வேலைகள் நடந்து வருகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதுகுறித்து ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் கூறியது,

கடந்த ஆண்டுக் குழந்தை ராமர் சிலை குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியாத பொதுமக்களையும் சேர்த்து கொண்டாட வேண்டும் என்பதுதான் கொண்டாட்டத்தின் நோக்கம்.

அதற்காக நாடு முழுவதும் உள்ள சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3 நாட்களும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், 110 மிக முக்கிய பிரமுகர்கள் உள்பட விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முடியாதவர்கள் ஆவர்.

இது, பொதுமக்கள் பங்கேற்க கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு ஆகும். அயோத்தி நகரத்தில் வசிப்பவர்களும், பக்தர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *